இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, மொழி வெறியை ஏதாவது ஒரு வகையில் திணித்து, அதிலே இவர்களை சிக்கவைத்து, அதன் மூலமாக இந்த ஆட்சிக்கோ, அரசுக்கோ ஆபத்துகளை உருவாக்கி விட முடியும் என்று கனவு கண்டார்களேயானால், நிச்சயமாக அந்த கனவு பலிக்காது. கனவு கனவாகவே தான் போய்விடும்.
ஏனென்றால் நீங்கள் ஒன்றை நினைத்தால் அதைவிட பன்மடங்கு நினைக்கக்கூடிய ஆற்றலை இந்த தமிழ் சமுதாயத்தினுடைய தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்ற தலைவர் தளபதி பெற்று இருக்கிறார். எனவே எந்த போராட்டத்திற்கும் நாங்கள் அஞ்சாதவர்கள், இன்றைக்கு துணிச்சலோடு எந்த மேடையிலும் கருத்துக்களை எடுத்துரைக்க கூடிய வல்லமை படைத்த ஒரு முதலமைச்சர் என்கின்ற பெயரை இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இன்றைக்கு சொல்கிறார்கள் நாங்கள் மாநில மொழிகளுக்காக தான் போராடுகிறோம் என்கிறார்களே… மாநில மொழி என்று சொல்லிவிட்டு அதிலே மத்தியிலே கொண்டுவந்து, இந்தியை திணிப்பதை தங்களுடைய செயலாக இன்றைக்கு அவர்கள் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே தான் இந்தி எதிர்ப்பு உணர்வு என்பது தமிழ் மண்ணில் மங்கி விடவில்லை, குன்றி விடவில்லை.
எந்த வடிவத்திலே வந்தாலும் அதை எதிர்ப்பதற்கு, சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டு தான், இன்றைக்கு தமிழகம் எங்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன் என தெரிவித்தார்.