ஒவ்வொருவரும் கொரோனாவை எதிர்த்து போராடும் போது பாஜக வகுப்புவாத வெறுப்புணர்வு வைரஸை பரப்புகிறது என சோனியா காந்தி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என சோனியா காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
முதல் கட்ட ஊரடங்கால் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்குவது நெகிழ்ச்சி அளிக்கிறது என்றும் நாட்டில் பரிசோதனை அளவு இன்னும் குறைவாக தான் உள்ளதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார்.
கடந்த 3 வாரங்களாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பரிசோதனையைத் தீவிரப்படுத்துங்கள் என காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மே 3-ம் தேதிக்குப்பின் சூழலை எவ்வாறு கையாளப்போகிறது என்பதற்கு மத்திய அரசிடம் தெளிவான சிந்தனை இல்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.