உலக நாயகன் கமல்ஹாசன் பல திறமை கொண்டவராவார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 1954-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் நாள் வழக்கறிஞர் டி.சீனிவாசன் – ராஜலட்சுமி தம்பதியருக்குக் கடைசி மகனாகப் பிறந்தவர் தான் பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன். இவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரு அண்ணன்களும், நளினி என்ற ஓர் அக்காவும் இருக்கிறார்கள். கடந்த 1960-ஆம் ஆண்டு வெளியான “களத்தூர் கண்ணம்மா” கமலின் முதல் திரைப்படமாகும். தனது 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ஜனாதிபதியின் கைகளால் தங்கப்பதக்கத்தைப் பெற்றார்.
அதன் பின்னர் சினிமா திரையுலகிற்குள் வந்தார். “களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தில் தொடங்கி “கன்னியாகுமரி” என்ற மலையாளப் படத்தில் முதல் கதாநாயகன், “அபூர்வ ராகங்கள்” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகன், “தசாவதாரத்தில்” உலகநாயகன் எனத் தொடர்ந்து இன்று வரையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் வங்கம் என ஆறு மொழிகளில் சுமார் 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இதுவரை நான்கு தேசிய விருதுகளும், 10 தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளும், 19 ஃபிலிம்ஃபேர் விருதுகளும், கேரள, ஆந்திர அரசின் விருதுகள், இந்தியாவின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள், செவாலியே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகளைப் பெற்றிருக்கின்றார்.
இதனை அடுத்து எம்.எஸ்.நடராஜன் மாஸ்டரிடம் “குச்சுப்புடி”, தங்கப்பன் மாஸ்டரிடம் “பரதம்”, “கதகளி” என கற்றுத்தேர்ந்த கமல்ஹாசன். “நான் ஏன் பிறந்தேன்” என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கும், “சவாலே சமாளி” என்ற திரைப்படத்தில் சிவாஜிக்கும், “அன்புத்தங்கை” என்ற திரைப்படத்தில் ஜெயலலிதாவுக்கும் நடன ஆசிரியராக இருந்திருக்கின்றார். இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கின்றார் நடிகர் கமல்ஹாசன். இதனைத் தொடர்ந்து ஹே ராம், சாச்சி 420, விருமாண்டி, விஸ்வரூபம் மற்றும் விஸ்வரூபம்-II உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பின்பு விக்ரம், மகாநதி, ஆளவந்தான், ஈநாடு, உன்னைப்போல் ஒருவன் மற்றும் தூங்காவனம் எனப் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார்.
இவர் தனது 100-வது படமான ராஜபார்வை தொடங்கி விக்ரம், தேவர் மகன், குருதிப்புனல், ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம்-II என 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்திருக்கின்றார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் சொந்தமாக வைத்திருக்கின்றார். மேலும் சிகப்பு ரோஜாக்கள், நாயகன், அவ்வை சண்முகி, அன்பே சிவம், புதுப்பேட்டை மற்றும் மன்மதன் அம்பு எனப் பல்வேறு திரைப்படங்களில் 70-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் 2017-ஆம் ஆண்டு தொடங்கி 2022 வரை 6 சீஸனாக வெளிவந்த “பிக் பாஸ்” நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.