மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லிப்ட் கேட்ட இளம்பெண் பலியான நிலையில், இரண்டு வாலிபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் மஞ்சுநாதன், ராஜசேகர் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் இவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் லிப்ட் கேட்டதால் மஞ்சுநாதனும், ராஜசேகரும் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றி உள்ளனர். இதனையடுத்து இவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிரே இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 வாலிபர்களையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பலியான பெண் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கொல்கத்தாவைச் சேர்ந்த செரீன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செரீன் எதற்காக இங்கே வந்தார் என்பது குறித்தும், விபத்து பற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.