மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் பிரகாஷ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேடவாக்கம் ஒட்டியம்பாக்கம் மெயின் ரோட்டில் பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் சித்தாலபாக்கம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, இவருக்கு பின்னால் வந்த லோடு வேன் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த பிரகாஷ் அந்த வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான செந்தில்வேல் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.