மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மதபோதகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் சுரேஷ் என்ற கிறிஸ்தவ மத போதகர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து வேலூருக்கு தனது மகள் பியூலா என்பவருடன் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
மேலும் பியூலா உயிருக்கு போராடும் நிலைமையில் இருந்தார். இதுகுறித்து தகவலறிந்த கவரைபெட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதோடு படுகாயமடைந்த பியூலாவை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.