கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் ஏட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், தாரணி என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் மணிமுத்தாறு ஒன்பதாவது பாட்டாலியனில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் மதுரை-நெல்லை நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இவரது மோட்டார் சைக்கிள் கோவில்பட்டி மணியாச்சி மேம்பாலத்தில் உள்ள வளைவில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனையடுத்து அங்கு உள்ள சாலையோர தடுப்பில் இவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.