கனமழையின் காரணமாக 21 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்கள் என்று பார்த்தோமேயானால், கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் நேற்று அதிக கன மழை பெய்திருந்தது. 9 மணி நேரத்திலேயே 25 சென்டி மீட்டர் என்ற அளவிற்கு மழை பதிவாகி இருந்த நிலையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இவ்வாறாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கும் மாவட்டங்கள் ஒருபுறமிருக்க திருவாரூர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக 14 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மேற்கு வங்க கடலில் உள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பதிவாகி இருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் மழை நிலவரம் மற்றும் மழை தொடர்பான பாதிப்புகளுக்கு ஏற்றவாறு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.