Categories
மாநில செய்திகள்

BigAlert: நிவர் புயல் : அடுத்த 6 மணி நேரங்களில் – மக்களுக்கு அடுத்த எச்சரிக்கை …!!

நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. அதே நேரத்தில் சென்னையில் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியபடி, மழையும் பெய்து கொண்டிருந்தது. மேலும் சென்னை மெரினா கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. இதேபோல், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன், பலத்த காற்றும் வீசியது.

ஆனால் அதன்பிறகு புயலின் நகர்வில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘புயலின் கண் பகுதியை கணிக்க முடியாத காரணத்தினால் அதன் தற்போதைய வேகத்தை கணிக்க முடியவில்லை’ என்று இரவு 7 மணியளவில் அவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர், 7.45 மணியில் இருந்து புயலின் நகர்வு வேகம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இரவு 8.30 மணி நிலவரப்படி கடலூருக்கு கிழக்கே தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே, தென்கிழக்கே 85 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கே தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

இரவு 10.45 மணிக்கு அதி தீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது,  அதி தீவிர புயலாக கரையைக் கடக்க தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையக் கடந்துள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் கரையை கடந்த நிலையில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து 6 மணி நேரத்தில் நிலப்பரப்பில் தீவிரமான நிலையில் இருந்து நிவர் புயல் வலுவிழக்கும். மேலும் ஆந்திரா பிச்சாட்டூர் அணையில் நீர் திறக்க உள்ளதால் திருவள்ளூர், ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |