தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது , திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி ஆட்சி அமைத்த பிறகு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகை கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதை கண்டறிந்த அரசு, கூட்டுறவு நகை கடைகளை ஆய்வு செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது. அதன்படி ஆய்வு பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளது.
நகை கடன் தள்ளுபடி சலுகை பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்தது. அதன்படி பயிர் கடன் தள்ளுபடி சலுகை பெற்றவர்கள், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நகை கடன் தள்ளுபடி சலுகை கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்ணை சரியாக வழங்காதவர்கள் என மேலும் பலரும் தள்ளுபடி சலுகை பெற தகுதி இல்லாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 35.38 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி சலுகை கிடையாது என்று நேற்று அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, நகை கடன் பெற்றவர்களின் 50 சதவீதம் பேர் இந்த தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர். முழு விபரங்களை சரிபார்த்த பின்னரே 40 கிராமுக்கு கீழ் கடன் பெற்றவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
நகையை அடகு வைக்காமல் பணம் பெற்ற மோசடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இன் ஆதார் அட்டையை வைத்து முறைகேடாக இரண்டு லட்சம் நகைக்கடன் பெறப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் நகை கடன் தள்ளுபடி குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. மக்கள் யாரும் அதனை நம்பி ஏமாற வேண்டாம். தமிழகம் முழுவதும் தகுதி உள்ள அனைவருக்கும் விரைவில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.