உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பற்றிய தகவல்களை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நோய்த்தொற்று நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அரசின் அறிவுரைகளை பின்பற்றாதவர்களுக்கு 6 மாத சிறை அல்லது அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கட்டத்திற்குள் நுழையும் முன்னர் கைகளை நன்கு கழுவிய பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.