கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை முற்பகல் 10.00 (உள்ளூர் நேரம்) முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனில் 10 நாட்களாக போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உக்ரைன் மக்களும், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் போர் நடக்கும் இடங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவும் வகையில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.