தமிழகம் முழுவதும் இனி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார். மாண்புமிகு முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும். அதில் முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் வலியுறுத்தப் படுகிறது.
தொட்டில் பழக்கம் என தொடங்கும் பழமொழிக்கு ஏற்ப மாணவர்களின் தொடக்கக் கல்வி முதல் கல்லூரி காலம் வரை தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு தமிழை முதன்முதலில் மாணவர்களின் பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டுவர மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம், வருகைப் பதிவேடு, பள்ளி கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்திட்டு வழங்கும் நடைமுறையை கொண்டு வரவும்.
மேலும் மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது. தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசு துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் ஆவணங்கள் பொதுமக்களின் பெயர்கள் குறிப்பிடும் போது முன் எழுத்துக்கள் உட்பட பெயர் முழுமையும் தமிழிலேயே பதிவு செய்யப்பட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அரசுத்துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தமிழின் பெருமையை சுட்டிக்காட்டியும், தமிழில் பெயர் எழுதுவதையும் முன்னெழுத்து தமிழில் குறிப்பிடப்படுவதையும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சுட்டிக்காட்டி வைக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே இனி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத அரசு ஆணையிட்டுள்ளது.