தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. அது தற்போதைய சூழலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அந்தமான் கடல் பகுதியில் வருகின்ற 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.