நல்ல மனைவியாக இருப்பதற்கான பொதுவான குணங்கள் இவை என்று முற்றிலுமாக வரையறுத்து விட முடியாது. ஆனால் மணவாழ்வில் கணவருக்கு பொருத்தமான இணையாக இருக்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில், மனைவியிடம் பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்க்கும் ஒருசில குணநலன்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
சுயமாக முடிவு எடுப்பவர் :
சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரத்தை போல் சுயமாக முடிவெடுக்கும் பெண்களை எப்போதும் ஆண்களுக்கு பிடிக்கிறது. ஒரு பெண் தான் சுயமாக முடிவெடுத்து அதில் உறுதியாக இருந்தால், மேலும் ஆண்களால் கவரபடுகிறார். இப்படி மனமுதிர்ச்சி பெற்ற பெண்ணுடன் உற்சாகமாக, பயனுள்ள பேச்சு பேசுவது ஆண்களுக்கு எளிதாக இருக்கிறது.
அன்புள்ளம் கொண்டவர் :
மனைவியிடம் ஆண் எதிர்பார்க்கும் முக்கியமான இரண்டு குணங்கள் அன்பும், பாசமும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எப்போதும் அக்கறையுடன் அன்பு காட்டும் ஆளுமை, தனக்கு மனைவியாக மட்டுமல்லாமல், தன் குழந்தைகளுக்கு சிறந்த தாயாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர்.
ஆதரவானவர் :
மணவாழ்க்கையில் அல்லது தம்பதியர் இருவருக்கும் பொதுவான விஷயங்களில் மட்டுமல்ல, தனது தனிப்பட்ட விருப்பங்கள், லட்சியங்களுக்கும் மனைவி ஆதரவாக இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். இருவருக்கும் தனித்தனியே லட்சியங்கள் இருக்கலாம். ஆனாலும், மனைவி தன்னை எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஆண்கள் விரும்புகின்றனர்.
சமயோசித அறிவு கொண்டவர் :
குடும்ப விஷயமோ அல்லது தனிப்பட்ட விஷயமோ தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயத்தில் அசிரத்தையாக இருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை. தான் முக்கியம் என்று கருதும் விஷயத்தை புரிந்து கொண்டு அதற்குரிய முக்கியத்துவம் அளிப்பவர் ஆக மனைவி இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கின்றனர்.
உங்களின் நிதி நிலைமை :
அனைத்து சவுகரியங்கள் உடன் வாழ வேண்டும் என்று விரும்பும் ஆண்கள் தன் சொந்த காலில் நிற்கும் சம்பாதிக்கும் பெண்களை அதிகம் விரும்புகின்றனர். அதற்காக சம்பாதிக்காத பெண்களை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதல்ல, வசதியான வாழ்க்கையில் தேவைக்கு மனைவியும் சம பங்களிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அனைத்து ஜோடிகளுக்கும் இது பொருந்தாது. செல்வந்தராக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைந்து திட்டமிடுதல் :
தனக்கென எதிர்கால திட்டம் கொண்டிருக்கும் பெண்ணை மணமுடிக்க பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். இருவரும் இணைந்து எதிர்கால திட்டங்களை வகுத்து செயல்படுவது நீண்ட உறுதியான குடும்ப வாழ்க்கைக்கு உதவும் என்பது ஆண்களின் நம்பிக்கையாக உள்ளது.