புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேரிடர் மீட்பு குழு உருவாக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உருவாகியுள்ள இந்த புயலுக்கு பாணி என்று பெயரிட்டுள்ளனர். மேலும் புயலானது வருகின்ற 30 ஆம் தேதி தமிழகத்தின் தென் கிழக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களையொட்டி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் சார்பில் பேரிடரை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு பேசினார் அவர் பேசியதாவது,அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக 29 பதற்றமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை கண்காணித்திட மேலும் அனைத்து கிராமப் பகுதிகளிலும் ஆய்வு செய்திட ஐந்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு குழுவானது தற்பொழுது பேரிடரை சமாளிப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் அதே சமயத்தில் மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
மேலும் கனத்த மழையின் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையம் செயல்படுத்தப்பட உள்ளது செயல்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ள 1077 என்ற எண்ணை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.