மாணவரிடம் கூடுதலாக வசூலித்த கல்வி கட்டணத்தை திருப்பி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த 2011 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு சேர்ந்தபோது கல்வி கட்டணமாக 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 1,42 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தை வங்கியில் கல்விக் கடன் மூலம் செலுத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் மற்றும் குடும்பத்தின் முதல் பட்டதாரி என்பதாலும் அரசின் உதவித் தொகையும் கல்லூரிக்கு நேரடியாகச் செலுத்தப்பட்ட நிலையிலும் தன்னிடம் கல்வி கல்லூரி நிர்வாகம் கூடுதலாக பணம் வசூலித்ததாக தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். படிப்பை முடித்த பின் சில ஆண்டுகள் வங்கியில் பெற்ற கல்வி கடனை செலுத்தி வந்த நிலையிலும் மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பாக்கி உள்ளது என வங்கி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் கல்லூரியை நாடிய போது ஒவ்வொரு வருடமும் கல்விக் கட்டணத்தில் அதிக கட்டணம் வசூலித்து தெரியவந்ததாகவும், பொறியியல் கல்லூரி கல்வி கட்டணம் வசூலிப்பதை அரசு நடைமுறைப்படுத்தி உள்ள போதும் அதனை பின்பற்றாமல் அதிக கட்டணத்தை வசூலிக்க ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னிடம் வசூலித்த கூடுதல் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பொறியியற் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மனுதாரரிடம் இருந்து வசூலித்த கல்வி கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உள்ளார்.