இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஐந்தாம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்டிருக்கின்ற அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகின்ற 5ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் தற்போது நடக்க உள்ளது. இலங்கையில் கொரோனா பாதிப்பு தற்போது வரை குறையாத காரணத்தால் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு தயக்கம் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மிகவும் பாதுகாப்பானவை என்றும், அதனால் மக்கள் அனைவரும் கொரோனா பற்றிய எத்தகைய அச்சமும் இல்லாமல் வாக்களிக்கலாம் என்றும் இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நடக்க இருக்கின்ற தேர்தலில் மக்கள் அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி அவர்களின் வாக்கை செலுத்தலாம். அதே சமயத்தில் வாக்குச்சாவடிகளில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளை வாக்காளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கடந்த தேர்தல்களில் செயல் படுத்தப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு தற்போதைய புதிய நடவடிக்கைகளுடன் அறிமுகப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார். நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்து தேசப்பிரியா நடத்துகின்ற கடைசித் தேர்தல் என்பதும், அவர் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் பணியிலிருந்து நிரந்தர ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.