பார்படோஸ் நாட்டில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டு முடியாட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கரிபியன் தீவில் உள்ள பார்படோஸ் நாடானது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து 1966 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. இருப்பினும் பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் செயல்பட்டு வந்தது. மேலும் சமீபகாலமாக பார்படோஸில் முழு இறையாண்மை மற்றும் உள்நாட்டு தலைமைக்கான அழைப்புகள் அதிகமாக காணப்பட்டன. இதனையடுத்து கடந்த ஆண்டு குடியரசு நாடாக மாற்றுவதற்கு பார்படோஸ் அரசு பல திட்டங்களை தீட்டியது.
இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை கூடிய சட்டசபை மற்றும் செனட் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை Dame Sandra Mason என்ற பெண் பெற்று நாட்டின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது பார்படோஸ் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றும் இது குடியரசுக்கான பாதை என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாயந்தது என்று அந்நாட்டின் பிரதமர் Mia Mottley தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 72 வயதான Dame Sandra Mason வருகின்ற நவம்பர் 30 ஆம் தேதி அதாவது நாட்டின் 55 வது சுதந்திர தினத்தன்று பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Dame Sandra Mason அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பார்படோஸ் தீவின் கவர்னர் ஜெனரல் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பணியாற்றிய முதல் பெண்ணும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.