பார்களில் மது பிரியர்கள் கூட்டம் இல்லாததால் பார் உரிமையாளர்கள் சிரமத்தில் உள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 8 மாதங்கள் டாஸ்மாக் மது பார்கள் மூடப்பட்டு இருந்தன. எனவே அனைத்து பார்களை திறக்க வேண்டும் என உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து பார்கள் திறக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 3,2௦௦ பார்கள் செயல்பட்டாலும், விற்பனையானது மந்தமாகவே உள்ளது. மேலும் புத்தாண்டன்று விற்பனையானது பல மடங்காக இருக்கும் என எதிர் பார்த்த போது இந்த ஆண்டில் நிர்ணயித்த குறைந்த இலக்கையே மது விற்பனை எட்டவில்லை.
இதனால் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள பார்கள் காலியாக கிடகின்றது. அதோடு கொரோனாவுக்கு முன்பு வரை அதிக அளவு மக்கள் கூட்டத்துடன் இருந்த பார்கள் தற்போது மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனைப்பற்றி டாஸ்மாக் ஊழியர்கள் கூறும்பொழுது தமிழகத்தில் உள்ள பல பார்களில் குளிரூட்டும் பெட்டிகள் பழுதடைந்ததோடு, மின்சார வசதியும் இல்லை. இதனையடுத்து ஏசி வசதி கொண்ட பார்களுக்கு வர தயக்கம் காட்டுவதோடு, திறந்தவெளியில் மது அருந்துவதற்கு பழகிக் கொண்டனர். இதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு தற்போது வேலைவாய்ப்பில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் மதுக்கடைக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டும் மது பிரியர்கள் பார்களுக்கு வருவதை குறைத்துக் கொண்டனர்.
இதனையடுத்து பொதுமக்கள் திறந்தவெளியில் மது அருந்துவதை போலீசார் கண்டித்தால் மட்டுமே பார்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என பார் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனை பற்றி பார் உரிமையாளர்கள் கூறும்பொழுது பார்களை திறக்க அரசு அனுமதி அளித்த பொழுதும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்படுவதால் 75 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாதம் ஏலதொகையாக அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை பாதியாக குறைக்க வேண்டும் என பார் உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இதனை நிர்வாகம் ஏற்காத காரணத்தினால், ஏலத்தொகை, தொழிலாளர்கள் சம்பளம், கட்டிட வாடகை என அனைத்தையும் சமாளிப்பது பெரும் சிரமமாக உள்ளதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.