உபி-யில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு வித்தியாசமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் பெருகிக் கொண்டே போவது அச்சுறுத்தக் கூடிய ஒரு விஷயம் ஆகும். இதன் காரணமாக பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்பது ஒரு புறமிருக்க, மற்றொருபுறம் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றிற்கான பற்றாக்குறை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும், இதனை கட்டுப்படுத்த நாம் இருவர், நமக்கு ஒருவர் என வீட்டிற்கு 1 குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்பது உள்ளிட்ட திட்டத்தை அரசு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்துவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் இறுதியில், நடைபெறும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், போட்டியிட தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.