கொரோனா நோய்த்தொற்று பிடியில் இருந்து தப்ப வங்கி ஊழியர்களின் பணி நேரத்தையும், பணி நாட்களையும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வங்கி பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனால் தினசரி லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா பிடியிலிருந்து வங்கி ஊழியர்கள் தப்ப வங்கிகளின் பணி நேரத்தையும், பணி நாட்களிலும் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் தேபசிஷ் பாண்டாவுக்கு அகில இந்திய வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி எச். வெங்கடாச்சலம் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிக அளவில் பரவி வருகின்ற நிலையில், வங்கிகள் தினம் தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டி இருப்பதால் கொரோனாவை பரப்பும் மையங்களாக திகழ்கிறது. வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக அளவில் வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் வங்கிகளின் பணி நேரத்தை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நேரத்தை குறைத்து இயக்க வேண்டும். அதேபோல், வாரத்துக்கு ஐந்து நாட்கள் மட்டும் வங்கிகள் இயங்கவேண்டும். இந்தக் கோரிக்கை அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு இதனை அமல்படுத்த வேண்டும்.
அதன்பின் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் கொண்ட நகரங்களில் எல்லா கிளைகளையும் திறந்து வைக்காமல், ஏதேனும் ஒரு கிளையை மட்டும் திறக்க அனுமதிக்கலாம். சுழற்சி முறைப்படி மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டும் நேரில் வந்தும் மற்றவர்கள் வீட்டில் இருந்தும் பணியினை செய்ய அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் வங்கி ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதை முற்றிலும் தவிர்க்க முடியும்.
வங்கி ஊழியர்களே முன்கள பணியாளர்களாக கருதி அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி போட அனுமதிக்க வேண்டும். கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல கொரோனாவால் இறந்த வங்கி ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.