பெங்களூரு கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பதற்றம் நீடிக்கிறது.
பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திரு. சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர், சமூகவலைதளத்தில் ஒரு மதம் குறித்த சர்ச்சை பதிவை வெளியீட்டு இருந்தார். இதையடுத்து புலிகேசி பகுதியில் உள்ள எம்.எல்.ஏ வீட்டின் மீது ஒரு கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் அச்சமடைந்த எம்.எல்.ஏவும் , நவீனும் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்றனர். இதை அறிந்த வன்முறைக் கும்பல் காவல் நிலையத்திற்கு சென்று வன்முறையில் ஈடுபட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தது.
வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 3 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்திற்கு காரணமான நவீன் உட்பட 110 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் காரணமாக பெங்களூரு நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் டி.ஜே ஹாலி மற்றும் கேஜி ஹாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது