Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு அரசு பள்ளிகளில் தடை?…. கல்வி பாதுகாப்பு கமிட்டியின் அதிரடி அறிக்கை…..!!!!!

அகில இந்திய கல்வி பாதுகாப்பு குழு கமிட்டியின் தமிழ்நாடு குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் பணியை தவிர பல்வேறு விதமான பணிகளை வழங்கு கின்றனர்.

இதனால் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்குள் எமிஸ் என்ற தகவல் மூலம் மாணவர்கள் குறித்த 32 வகையான தகவல்களை சேகரித்து கணினியில் பதிவேற்றம் செய்யும்படி ஆசிரியர்களுக்கு பணி கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு வருடத்தில் பல நாட்கள் பயிற்சிக்கு செல்வது, இலவச பொருட்களை குறிப்பிட்ட இடத்திலிருந்து பள்ளிக்கு எடுத்துச் செல்லுதல், முதன்மை கல்வி அலுவலகம் செல்லும் பணி, அலுவலக தபால்களை கணினியில் பதிவேற்றம் செய்தல், விபரங்கள் குறித்து பதில் தருதல், பள்ளியில் கற்பித்தல் தவிர பல்வேறு விதமான பணிகள் போன்றவைகள் ஆசிரியர்கள் மீது சுமத்தப்படுகிறது.

அதன் பிறகு வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணி, வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சேகரித்தல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி, வாக்காளர் அடையாள அட்டையில் புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் இடம் மாறியவர்களுக்கு அதை மாற்றிக் கொடுத்தல் போன்ற பல்வேறு விதமான பணிகளும் ஆசிரியர்கள் மீது சுமத்தப்படுகிறது.

இதனால் ஆசிரியர்களுக்கு மனச்சுமை ஏற்பட்டு கற்பித்தலில் கவனம் செலுத்த முடிவதில்லை. ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு கற்பிக்கும் பொன்னான பணி மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.  ஆனால் அது தவிர மற்ற அனைத்து பணிகளும் கொடுக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு முறை சார்ந்த கல்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முறைசாரா கல்விகளான எண்ணும் எழுத்தும் திட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு அவர்களால் கற்பித்தல் பணியை மேற்கொள்ள முடியவில்லை. எனவே அரசு பள்ளிகளில் கற்பித்தல் தவிர வேறு எந்த பணிகளிலும் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பணிகளை வேலையின்றி தவித்து வரும் இளைஞர்களுக்கு வழங்குவது தான் சரி. மேலும் இல்லம் தேடி கல்வி மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற முறை சாரா கல்விகளை உடனடியாக பள்ளியில் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |