அரசு மருத்துவமனையில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் முறையாக பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வசிக்கும் 57 வயது நபருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அவருக்கு இதயத்தில் ஸ்டண்டு பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அந்த நபருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அந்த நபருக்கு பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து மருத்துவமனை டீன் விமலா கூறும்போது, இதயவியல் துறை தலைவர் டாக்டர் முனுசாமி, டாக்டர் நம்பிராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்ட நபரை பரிசோதனை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். அந்த சோதனையில் அவருக்கு ரத்தக் குழாய் சுருக்க நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணத்தினாலேயே மாரடைப்பு ஏற்பட்டவருக்கு மருந்து பூசப்பட்ட பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இதுபோன்ற சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.