ரஜினி மற்றும் கமல் ஒரு போதும் கருணாநிதி,ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தேனி மாவட்டத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியது, பா.ஜ.க வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது. ஆனால் அவர்களின் கனவை நாங்கள் முறியடிப்போம். அதுவே எங்கள் முதல் பணி. ஜாதி மத பேதமற்ற பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் பெரியார். மதசார்பற்ற கூட்டணியான திமுக அக் கொள்கையை முன்னெடுத்து செல்கிறது.
கொரோனா நோய் தொற்று காரணமாக வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களுக்கு ரூ.5000 வழங்கச் சொல்லி பல்வேறு இடங்களில் போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். அப்போது வழங்காமல் தேர்தலை மனதில் வைத்து கொண்டு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2500 வழங்குவதே உள்நோக்கமான செயலாகும். சசிகலா வெளியே வந்தவுடன், சசிகலா,தினகரன், அதிமுக என மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்தாலும் எங்களது கூட்டணியே வெற்றி பெறும்.
ரஜினி,கமல் என எந்த நடிகர் வேண்டுமானாலும் அரசியலில் நுழையலாம். ஆனால் இவர்களை விட திறமையான நடிகர் சிவாஜிகணேசனே அரசியலில் வெற்றி பெறவில்லை. ரஜினி ஒரு நல்ல நடிகர். நான் அவருடைய ரசிகன். ஆனால் அரசியல் வேறு, நடிப்பு வேறு. தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் என எதுவும் இல்லை. ரஜினி மற்றும் கமல், ஒருபோதும் கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்பமுடியாது.