கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரேவி புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. தற்போது கடந்த 4 நாட்களுக்கு நாட்களாக தமிழகத்தில் வறண்ட நிலையில் காணப்படுகிறது. மீண்டும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளார். 28 மற்றும் 29 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என கூறியுள்ளார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்தார். டிசம்பர் 27-ஆம் தேதி அரபிக்கடல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என அவர் கூறியுள்ளார்.