ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை மற்றும் உச்ச பூஜைக்கு பின் காலை 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். பின்னர் இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படும். வருகிற 21-ந் தேதி வரை ஆவணி மாத பூஜைகள் நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. இதனால் சிறப்பு பூஜை வழிபாடுகளான, நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் செங்கன்னூர் கண்டரரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை மாறி, மாறி தந்திரியாக பொறுப்பேற்று பூஜைகள் தொடர்பான செயல்பாட்டை முன்னின்று நடத்துவார்கள். சென்ற ஒரு வருடமாக சபரிமலையில் தந்திரியாக இருந்த கண்டரரு மகேஷ் மோகனரின் பதவிகாலம் நிறைவு பெற்றது.
இந்த வருட புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு பொறுப்பேற்று சபரிமலையில் தனது பணிகளை தொடங்கினார்.அடுத்த ஒரு வருடத்திற்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு ஆவணி மாத முதல் தேதியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு ஐப்பசி மாதம் 1-ந் தேதி நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.