ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உகந்தான்பட்டி பகுதியில் ஆட்டோ டிரைவரான சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சின்னத்துரை கண்டியப்பேரி விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ நிலைத்தடுமாறி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்னதுரை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து நெல்லை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சின்னத்துரையின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.