மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கிறிஸ்மஸ் தினத்தன்று தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சென்று தீக்குளிக்க முயன்றார். அப்போது அவர் தன் மீதும் பிள்ளைகள் மீதும் பெட்ரோல் ஊத்தியுள்ளார். இதில் குழந்தைகளின் கண்ணில் பெட்ரோல் பட்டதால் அவர்கள் கதறி அழுதனர். பின்னர் ஜீவானந்தம் தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன்ற போது பொதுமக்கள் மற்றும் நுழைவு வாயிலில் நின்ற போலீசார் இணைந்து அவரை தடுக்க முயற்சித்தனர்.
அவரிடம் மேற்கொண்ட போலீஸ் விசாரணையின் போது ஜீவானந்ததிற்கு சொந்தமான ஆறு சென்ட் நிலம் உள்ளதாகவும் அந்த நிலத்தில் கடை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்து அமைப்பை சேர்ந்த நபர் அந்த இடத்தில் நடைபாதை வருவதாகவும் ஜீவானந்தம் அதனை மறைத்து கடை வைத்துள்ளதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும் ஜீவானந்தத்தை ரூபாய் பத்தாயிரம் தருமாறு தொந்தரவு செய்துள்ளார் .
இதனால் தான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகவும் இவ்விவகாரம் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சியின் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறினார். இதன் காரணமாகவே குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.