அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை கூகுள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என தலைமை செயலாளர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் இயங்கும் ஐ டி அலுவலகங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் வீட்டிலிருந்து தங்கள் ஊழியர்களை பணியாற்றுமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான காலத்தை அதிகரித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தங்கள் ஊழியர்களுக்கு இ மெயில் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியதாவது: ஊழியர்கள் தங்களின் வருங்கால இயக்கத்தை திட்டமிட்டு கொள்ளும் வகையில் உலக அளவில் வீட்டில் இருந்து பணியாற்றும் அனுமதியை அதிகரித்து இருக்கிறோம். இதனால் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் அவசியமில்லாத பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் ஜூன் 30, 2021 வரை வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 2 லட்சம் கூகுள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இதனால் பயன்பெறுவர்கள் என தெரிவித்துள்ளார்.