மேய்ந்து கொண்டிருந்த மாட்டை கடித்து கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வீரதப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மாடுகளை மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்தநிலையில் மாலை வேளையில் மாடுகளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல வீரதப்பா வந்துள்ளார். அப்போது அதில் ஒரு மாட்டை காணாததால் அதிர்ச்சியடைந்த வீரதப்பா பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார்.
இந்நிலையில் மாடு அருகில் இருந்த ஒரு ஓடையில் இறந்து கிடப்பதை கண்டு வீரதப்பா அதிர்ச்சியடைந்தார். அங்கு சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு அருகிலுள்ள ஓடைக்கு தண்ணீர் குடிக்கச் சென்றபோது சிறுத்தை அதை கடித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் கால் தடம் இருந்ததை உறுதி செய்தனர். ஆகவே அட்டுழியம் செய்து வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.