எத்தியோப்பிய இராணுவம் தனிநாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு டீக்ரே போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
எத்தியோப்பிய இராணுவம் தனிநாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு டீக்ரே போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போராளிகள் தரப்பில் ஆளில்லா விமானங்கள், டாங்குகள், எறிகணைகள், விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் வடக்கு டீக்ரே போராளிகள் குழுவை சேர்ந்த மூத்த பிரதிநிதி ஒருவர் பிராந்தியம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் எத்தியோப்பிய அரசு தாக்குதல் குறித்து எந்த தகவலையும் உறுதிபட தெரிவிக்கவில்லை. அதோடு மட்டுமில்லாமல் எத்தியோப்பியாவில் தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்ட காரணத்தினால் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல் தெளிவாக தெரியவில்லை. ஆனால் கடந்த வாரம் வடக்கு டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி அமைப்பின் மூத்த உறுப்பினர் கெட்டாசூவ் ரீடா இப்போது முழுவீச்சில் அரசுப் படைகளின் தாக்குதல் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை 11 மாதங்களாக இந்த நெருக்கடி நீடித்து வருவதால் சுமார் நான்கு லட்சம் பேர் பஞ்சம் போன்ற சூழலில் தவித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக வெளியேறி சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.