நியூசிலாந்தின் பல்பொருள் அங்காடியில் இலங்கையை சேர்ந்த நபர், திடீரென்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள North Island மாகாணத்தின் ஆக்லாந்து நகரில் இருக்கும் Countdown பல்பொருள் அங்காடியில், இன்று மதியம் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் வாளுடன் புகுந்துள்ளார். அதன் பின்பு, திடீரென்று அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.
இதில் மூன்று நபர்களின் கழுத்து பகுதியிலும், மார்பு பகுதியிலும் பலமான காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து, அந்த நபரை தடுக்க முயன்றனர். எனினும், தடுக்க முடியாமல் போனது.
எனவே, வேறு வழியின்றி அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அதன் பின்பு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளதாவது, இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர், இலங்கையை சேர்ந்தவர்.
எனினும், நியூசிலாந்தில் தான் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறார். மேலும், அவர் ‘ஐஎஸ்ஐஎஸ்’ தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், நியூசிலாந்தின் ‘தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில்’ அந்த நபரின் பெயர் இணைக்கப்பட்டு, கடந்த 2016-ஆம் வருடத்திலிருந்து, காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறியிருக்கிறார்.