ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்ககளை பொதுமக்கள் பாராட்டினர்.
அரியலூர் மாவட்டம் காரைப்பாக்கத்தில் பழனிச்சாமி மனைவி மூக்காயி(72) வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க இறங்கியபோது நிலை தடுமாறி விழுந்துவிட்டார். இதனால் மூதாட்டி மூக்காயி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திருமானூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி திருவையாறு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆரோக்கியதாஸ், பிரபாகரன், சண்முகம், கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆற்றில் இறங்கி மூதாட்டியை மீட்கும் முயற்சியில் அதிரடியாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்குள்ள திடீர் நகர் பகுதியில் மிதந்து வந்த மூதாட்டி மூக்காயியை மிதவை உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு திருமானூர் கரைக்கு கொண்டு வந்தனர். அதன்பின் மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இவ்வாறு கரைபுரண்டு ஓடும் அந்த ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.