அதிமுக எடப்பாடி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று இரு தரப்பாக பிளவுபட்டு நாளுக்கு நாள் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மக்கள் மன்றத்தில் கட்சி யார் கையில் என்பது நிரூபிக்க வேண்டிய சூழல் தற்போது இல்லை என்றாலும் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நிருபிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சியாக ஜனநாயக ரீதியில் செயல்பட கட்டுக்கோப்பான தலைமை தேவைப்படுகிறது. எனவே கட்சி தலைமை கைப்பற்றுவதற்கான வேலைகளை இரு தரப்பு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்க இருக்கிறது. இதில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையில் மோதல் ஏற்பாடு கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற ஆலோசனை கூட்டத்தில் ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஓபிஎஸ் தொடர்ந்து உள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை எதிர்கொள்வது, சசிகலாவின் சுற்றுப்பயணம் விவாகரத்தை உன்னிப்பாக கவனிப்பது.
அதுமட்டுமில்லாமல் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு பிரமாண்டமான கூட்டத்தை கூட்டுவது, சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் துணை கொறடா விஷயத்தில் சலசலப்பு ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள். மேலும் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் தங்க கவசத்தை அணிவிக்கும் விஷயத்தில் தங்கள் தரப்பிற்கு சாதகமான அம்சங்கள் பற்றி ஆலோசனை செய்து முடிவு எடுப்பது ஆகியவை ஆகும். இந்த விஷயங்களில் முதலில் கவனிக்க வேண்டிய சட்டமன்ற விவகாரம். ஏனெனில் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. ஏற்கனவே எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரும், துணை கொறடா பதவிக்கு மனோஜ், பாண்டியனை நீக்கிவிட்டு அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நியமித்து எடப்பாடி தரப்பில் சபாநாயகர் அப்பாவிற்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஏற்கப்படவில்லை. எனவே கூட்டத்தொடர் தொடங்கும் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால் சட்டமன்றத்திற்கு வரும் ஓபிஎஸ் தரப்பை எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இதனால் இன்றைய அதிமுக கூட்டத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.