போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக சுற்றுச் சாலைகள் அமைப்பதற்கும் அதிகாரிகள் திட்டம் தீட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. எனவே உள்ளூர் திட்டக் குழுமத்தின் எல்லைக்குட்பட்ட திருப்பூர், அவினாசி, பல்லடம் போன்ற பகுதிகளில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் இதற்கு முடிவு காண்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமையில், உள்ளூர் திட்ட குழுமம் அதிகாரிகள், காவல்துறை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து திருப்பூர், அவினாசி, பல்லடம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களான சாலை சந்திப்பு, பேருந்து நிறுத்தம் போன்றவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை கூட்டத்தில் சமர்ப்பித்தனர். மேலும் சுற்றுச் சாலைகள் அமைக்கவும் திட்ட அறிக்கையை தனியார் நிறுவனத்தினர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். திருப்பூர் மாநகரில் இருந்து பின்னலாடை வர்த்தகர்கள் கோவை விமான நிலையத்திற்கு தாமதம் இன்றி செல்லும் வகையில் சாலை பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் திட்டம் தீட்டியுள்ளனர். ஆகவே 10 வகையான மேம்பாட்டு திட்டங்கள் பரிசீலனையில் இருக்கின்றது. இந்த அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை செய்து பின் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.