இந்தியாவில் திருமணம் செய்வதற்கு ஆணின் வயது 21 மற்றும் பெண்ணின் வயது 18 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயதில் நடைபெறும் திருமணங்கள் மட்டும் அரசால் அங்கீகரிக்கப்படும் என்றும் இந்த வயதிற்கு குறைவாக திருமணம் செய்பவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அதன்படி இந்தியாவில் பல மாநிலங்களில் பெண்கள் திருமண வயது வருவதற்கு முன் அவர்களுக்கு திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தடுப்பதற்காக மாநிலங்களில் குழந்தைகள் நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி திருமணம் செய்து வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கேரளாவில் ஆண்டுதோறும் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதில் கடந்த ஆண்டில் குழந்தை திருமணம் 41 வழக்குகளும், இந்த ஆண்டு 8 மாதங்களில் 45 வழக்குகளும் பதிவாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 27 புகார்களும் இந்த ஆண்டு 36 புகார்களும் பதிவாகியுள்ளது. அதனை போல இடுக்கியில் 3 புகார்கள், திருச்சூர் திருவனந்தபுரம் எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.
அது மட்டுமில்லாமல் கேரளாவில் கடந்த ஆண்டில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரிடம் 145 புகார்கள் வந்துள்ளது என்றும் அதில் 109 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தை திருமணங்களை தடுக்க சட்டங்களை அரசு கடுமையாகியது மட்டுமில்லாமல் இதுபற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2500 பரிசு வழங்கப்படும் என்றும் குழந்தை திருமணங்களை கோர்ட் நடவடிக்கை முலம் ரத்து செய்யப்பட்டு அவர்களின் உடமைகளை மீட்டு தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.