ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் ஆக்ஸிஜனை தயாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பல்வேறு இடங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றது. இதனையடுத்து இந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியானது இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் மீண்டும் இந்த ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக் கூடாது என்று எதிர்ப்பாளர்கள் சிலர் மனு கொடுத்துள்ளனர். இதனை எதிர்த்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பல ஆதரவாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும், கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.