தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என இளம்பெண் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள தாட்கோ பகுதியில் பிரான்சிஸ் அந்தோணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜூலி, அபிதா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 18ஆம் தேதியன்று பிரான்சிஸ் அந்தோணி ரேஷன் கடையிலிருந்து 20 கிலோ அரிசி வாங்கிக்கொண்டு தனது தம்பியான சின்னச்சாமி என்பவரை காண்பதற்காக புளியரை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 20 கிலோ ரேஷன் அரிசி இருப்பதைக்கண்டு அரிசியை பறிமுதல் செய்ததோடு பிரான்சிஸ் அந்தோணியை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் ஏட்டு மஜீத் ஆகியோர் இணைந்து பிரான்சிஸ் அந்தோணியிடம் விசாரணை நடத்தி அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதனால் காயம் அடைந்த பிரான்சிஸ் அந்தோணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பிரான்சிஸ் அந்தோணியின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரை பார்த்துள்ளனர். இந்நிலையில் பிரான்சிஸ் அந்தோணியின் இரண்டாவது மகளான அபிதா என்பவர் அரசு மருத்துவமனையின் அருகில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தனது தந்தையை விடுவிக்க வேண்டும் எனக் கூறி சத்தமிட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அபிதாவிடம் பிரான்சிஸ் அந்தோணியை வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்த பிறகு அபிதா செல்போன் கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார்.
இதனையடுத்து பிரான்சிஸ் அந்தோணியை காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற பிரான்சிஸ் அந்தோணி காவல்துறையினர் தன்னை தாக்கியதை தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து சகோதரிகள் இருவரும் தங்களது தந்தையை மீண்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அபிதா மீண்டும் மருத்துவமனையின் மேல்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அபிதா இதையெல்லாம் செய்ய வில்லை என்றால் நான் இங்கு இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தண்ணீர் தொட்டியின் மேல் நின்றிருந்த அபிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதற்கு அபிதா வழக்குப்பதிவு செய்து, அதற்கு உண்டான ஆவணங்களை தன்னிடம் காட்டினால் மட்டுமே கீழே இறங்கி வருவேன்என்றும் அப்படி செய்ய விட்டால் இங்கிருந்து குதித்து விடுவேன் என்றும் கூறி விடிய,விடிய தண்ணீர் தொட்டியின் மேலே இருந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அபிதாவின் தந்தையை தாக்கிய காவல் துறையினரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் அந்த ஆவணங்களை அபிதாவிடம் காண்பித்தார்கள். இதனைப் பார்த்த பிறகு அபிதா போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தார். அதன் பிறகு காவல் துறையினர் அபிதா மற்றும் ஜூலி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த போராட்டத்தால் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.