பர்கினோ பசோ நாட்டில் நடந்த திடீர் பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஐ.எஸ்., அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் பர்கினோ பசோ நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க தீவிரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இடானா நகரில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் சோதனை சாவடியை குறிவைத்து திடீரென தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 49 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல் பொதுமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். எனவே பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.