ஈகுவடார் நாட்டில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈகுவடார் நாட்டில் உள்ள சுகுவோ என்ற நகரத்திலிருந்து புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்றில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அந்த பேருந்து மக்காஸ்-லோஜா என்ற நெடுஞ்சாலை வழியாக பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மரண பீதியில் அலறியுள்ளனர். இந்த நிலையில் டிரைவர் பேருந்தை நிறுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் பலத்த காயங்களுடன் இருந்த 25 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர்களில் சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையே பேருந்து விபத்துக்கான காரணம் என்ன ?என்பது குறித்த விசாரணையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஈகுவடார் அரசு உத்தரவிட்டுள்ளது.