Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup : ஜெயசூர்யா முதல் ஹிட் மேன் வரை….. வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியல் இதோ..!!

இதுவரை ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்..

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி 7 முறை கோப்பையை வென்றுள்ளது. இலங்கை அணி 5 முறையும், மீதமுள்ள 2 சீசன்களில் பாகிஸ்தான் வென்றுள்ளது.

இந்நிலையில் 20 ஓவர்களாக நடைபெறும் 15ஆவது ஆசிய கோப்பையை எதிர்நோக்கி கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.  இந்நிலையில் இதுவரை ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.. இதில் இந்திய வீரர்கள் 4 பேர் டாப் 10 இடங்களை பிடித்துள்ளனர்.. ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். 1990 முதல் 2012 வரை, டெண்டுல்கர் 21 போட்டிகளில் 971 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் அடங்கும்.

இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார். 1990 மற்றும் 2008 க்கு இடையில், முன்னாள் இலங்கை கேப்டன் சனத் ஜெயசூர்யா 25 போட்டிகளில் 53.04 சராசரியுடன் 1,220 ரன்களையும், ஆசிய கோப்பை போட்டிகளில் 102.52 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 6 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களைப் பதிவு செய்துள்ளார். 2008  ஆசிய கோப்பையில்  ஜெயசூர்யா 5 போட்டிகளில் 378 ரன்களை சராசரியாக 75.60 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 126 இல் குவித்தார். அந்த போட்டியில் மட்டும் அவர் 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார். ஜெயசூர்யா 1997ல் 4 போட்டிகளில் 204 ரன்களும், 2004ல் 5 போட்டிகளில் 293 ரன்களும் எடுத்தார். இதன் காரணமாக 1997, 2004 மற்றும் 2008ல் மூன்று ஆசியக் கோப்பைப் பட்டங்கள் இலங்கைக்கு கிடைத்தது.

ஜெயசூர்யாவுக்கு அடுத்தபடியாக முன்னாள் சக வீரர் குமார் சங்கக்கார ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சங்கக்கார 24 ஆசியக் கோப்பை போட்டிகளில் 48.86 சராசரியிலும் ,84.51 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 1,075 ரன்கள் எடுத்தார். இடது கை ஆட்டக்காரர் சங்கக்காரா 2004 மற்றும் 2014 க்கு இடையில் 4 சதங்கள் மற்றும் 8 அரைசதங்களை அடித்தார். 2004ல் 156 ரன்களும், 2008ல் 345 ரன்களும், 2010ல் 184 ரன்களும், 2012ல் 142 ரன்களும், 2014ல் ஆசிய கோப்பையில் 248 ரன்களும் குவித்துள்ளார். சங்கக்காரா 2004, 2008 மற்றும் 2014ல் 3 முறை ஆசிய கோப்பையை வென்றார்.

இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 3ஆவது இடத்தில் உள்ளார். முன்னாள் இந்திய தொடக்க பேட்டர் 23 போட்டிகளில் 51.10 சராசரி மற்றும் 85.47 ஸ்ட்ரைக் ரேட்டில் 971 ரன்கள் குவித்தார். 1990 மற்றும் 2012 க்கு இடையில், டெண்டுல்கர் 2 சதங்கள் மற்றும் 7 அரை சதங்களை போட்டியில் பதிவு செய்தார். அவர் 1995 ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர், 4 போட்டிகளில் 68.33 சராசரி மற்றும் 109.62 ஸ்ட்ரைக் ரேட்டில் 205 ரன்கள் குவித்தார். சுவாரஸ்யமாக, 2012 ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் பங்களாதேஷுக்கு எதிராக டெண்டுல்கர் தனது 100வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார். சச்சின் 1991 மற்றும் 1995 இல் இந்தியாவின் 2 ஆசியக் கோப்பை வென்ற அணிகளில் ஒரு பகுதியாக இருந்தார். இந்தியா 2010 ஆசிய கோப்பையில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனதையடுத்து சச்சின் விலகினார்.

ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்களில் 4ஆவது இடத்தில் சோயிப் மாலிக் இருக்கிறார்.. 2000 மற்றும் 2018 க்கு இடையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டனான மாலிக்  21 போட்டிகளில் 64.78 சராசரி மற்றும் 93.02 ஸ்ட்ரைக் ரேட்டில் 907 ரன்கள் எடுத்துள்ளார். ஆசிய கோப்பை வரலாற்றில் 3 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுக்கு 2018ல்  ஆசிய கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் 27 போட்டிகளில் 42.04 சராசரி மற்றும் 90.01 ஸ்ட்ரைக் ரேட்டில் 883 ரன்கள் குவித்துள்ளார். அவர் ஆசிய கோப்பை போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்களை பதிவு செய்துள்ளார். 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை வென்ற இந்திய அணியிலும் ரோஹித் இடம் பெற்றிருந்தார். இந்த ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மா அதிக ரன்கள் அடித்து மாலிக் மற்றும் சச்சினை பின்னுக்கு தள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியைப் பொறுத்தவரை, ஆசிய கோப்பை போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன் குவித்த மூன்றாவது வீரர் ஆவார். ஆசிய கோப்பையில் 3 சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரரும்  விராட் கோலி தான்.. விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த முதல் 10 வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற மற்ற இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள். கோலி தற்போது 16 போட்டிகளில் 766 ரன்களுடன் ஆறாவது இடத்தில் உள்ள நிலையில், தோனி 24 போட்டிகளில் 690 ரன்களுடன் 9வது இடத்தில் உள்ளார்.

 

 

Categories

Tech |