பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பிரிவுகளின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தை வலுப்படுத்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்ககளை விரிவாக பட்டியலிட்டுள்ளோம். நிபுணர்களின் ஆலோசனைபடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
பிரதமரின் கூற்று படி மக்கள் உயிரை காப்பதே பிரதானம், பொருளாதாரம் இரண்டாம் பட்சம் தான். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் குற்றம் காணலாம் என தெரிவித்துள்ளார். வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் கையில் பணம் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தொழில்முனைவோருக்கு வங்கி மூலம் நேரடியாக பணம் வழங்கப்படும். தொழில் தொடங்கும் போது தான் தொழிலாளர்கள் கையில் பணப்புழக்கம் இருக்கும்.
வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு, உத்தரவை மீறி பணத்தை பிடித்தால் வங்கிகள் குறித்து நிதியமைச்சக மின்னஞ்சலுக்கு புகார் தெரிவிக்கலாம், புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் இல்லாததால் எல்லோருக்கும் ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மேலும் முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதியை அரசே கட்டும் என அறிவித்துள்ளார். வேலையிழப்புகளை சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழில்துறையை மீட்டெடுப்பதன் மூலமே பணப்புழக்கத்தை ஏற்படுத்த முடியும். அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த சரியான புள்ளி விவரம் நம்மிடம் இல்லை, இதனால் கிராமபுற விவசாய பணிகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளது என நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார்.