நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த நாளே உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால் கடந்த செவாய்க்கிழமை, எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை. இதனிடையே மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து வந்தனர். அதை தொடர்ந்து நேற்று இரவிலிருந்தே அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமாக இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார்.
இவரது மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பாஜகவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த அருண் ஜெட்லி அவர்கள் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராகவும் சேவையினை நல்கியுள்ளவர். அவர்கள் மறைவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்.
#ArunJaitley அவர்கள் மறைவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன். #riparunjaitely
— O Panneerselvam (@OfficeOfOPS) August 24, 2019