ஆற்றில் காணாமல்போன சிறுவனை தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் ஹரிஷ் என்ற சிறுவர்கள் நேற்று முன்தினம் காலை அடையாறு ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரும் ஆற்றில் குளிக்கும் பொழுது காணாமல் போயுள்ளனர். இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தீயணைப்பு படையினர் விரைவாக வந்து ரப்பர் படகுகள் மூலமாக காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுவன் சந்தோஷ்குமார் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மற்றொரு சிறுவனான ஹரிஷை நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. மேலும் இரண்டாவது நாளான நேற்று காலை கிண்டி, அசோக் நகர், சைதாப்பேட்டை போன்ற பகுதியில் உள்ள தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் ஏழு ரப்பர் படகுகள் மூலம் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்.
இதனை அடுத்து நேற்று இரவு வரை தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தேடுதல் பணியை தீயணைப்பு படையினர் தீவிரமாக்கியுள்ளனர். குறிப்பாக இரண்டு நாட்கள் தேடியும் ஹரிஷை கண்டுபிடிக்க முடியாததால் அவனின் குடும்பத்தாரும் அப்பகுதி மக்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.