18 வயது பூர்த்தியடையாத சிறுமியை காதல் திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழமாத்தூர் கிராமத்தில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வினோத்ராஜ்க்கும் அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது.
சில நாள்களுக்கு பின் வினோத்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்று திருமணம் பற்றி பேசியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர்கள் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்ற காரணத்தைக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வினோத்ராஜ் சிறுமியை வெளியூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமி சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மகளிர் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் பாட்டி வினோத்ராஜ் மீது கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வாலிபர் மீது வழக்குப்பதிந்து பின் போக்சோவில் கைது செய்தனர்.