பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி, கூத்தூர், கொளக்காநத்தம், பிலிமிசை ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாக ஆடுகள் திருட்டு போயின. இந்நிலையில் ஒரு ஆட்டை மோட்டார்சைக்கிளில் வைத்துக்கொண்டு வந்த ஒரு நபரை கொளக்காநத்தம் பகுதியை சேர்ந்த மக்கள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் கிராம மக்கள் சந்தேகத்தில் அவரை பிடித்ததோடு, மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருடி சென்றதும், அவர் பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் வசித்து வரும் ராஜு என்பவரது மகன் பாலகிருஷ்ணன் ( 26 ) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த மருவத்தூர் காவல்துறையினர் பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.