VandeBharathMission இன் கீழ் 23 விமானங்கள் மூலம் சுமார் 4000 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இதுவரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 4,000 இந்தியர்கள் 23 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேபோல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 468 சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 101 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், கேரளா, டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊர் திரும்ப நடந்து செல்ல அனுமதிக்க கூடாது என மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.