பாகிஸ்தானில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு இந்த வாரம் 100 இந்திய பக்தர்கள் செல்லவுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் என்னும் இந்து கோயில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித்தத் தலமாகக் கருதப்படும் இந்த கோயிலுக்கு, வருடந்தோறும் நவம்பர்-பிப்ரவரி மாதங்களில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். அந்த வகையில், வரும் சனிக்கிழமை அன்று 100 இந்திய பக்தர்கள் கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு செல்லவுள்ளனர்.
“வரும் வெள்ளிக்கிழமை அன்று வாகா எல்லையைக் கடந்து பாகிஸ்தானை அடையும் பக்தர்கள், மறுநாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவர்” என்று தனியார் அறக்கட்டளை ஒன்றின் துணைச் செயலர் சையத் ஃபராஸ் அபாஸ் தெரிவித்தார். மேலும், சுமார் 200 பக்கதர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அம்மாநில அரசு செய்துள்ளதாக அவர் கூறினார்.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தலைமையிலான அரசு, கட்டாஸ் ராஜ் கோயில் அருகே பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக 36 அறைகளைக் கொண்ட ஒரு விடுதியை கட்டும் திட்டத்தை தொடங்கிவைத்தார். ஆனால், இந்த திட்டம் இன்னமும் முடிந்தபாடில்லை.